தேகப் பொலிவுக்குத் தினமும் கற்றாழை!

'கத்தாழைக் கண்ணாலே குத்தாதே’ பாடலைக் கேட்டவுடனே ஒரு குத்தாட்டம் போடவேண்டும் என்று எல்லோருக்குமே தோன்றும். கற்றாழை, நீர்நிலை இல்லாத இடங்களிலும் வளரும் மருத்துவக் குணம் கொண்ட மகத்தான தாவரம். கற்றாழையின் எல்லையில்லா பயன்களைப் பற்றி, சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம் சொல்வதைப் படித்தால், அது உங்களுக்கே புரியும். 


எல்லோருக்கும் ஏற்ற எளிமையான, எல்லாவிதமான சத்துகளும் ஒருங்கே கொண்டது கற்றாழை. உரிய வயதில், பூப்பெய்தாத பெண்களுக்குக் கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் 'மூசாம்பர மெழுகை’க் கொடு்த்தால் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு அதிகரித்துப் பூப்பெய்தல் எளிதாகும். வைட்டமின் ஏ, சி, இ மற்றும் வைட்டமின் பி1, பி6, பி12 இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும். உடலுக்குத் தேவையான அத்தியாவசிய அமினோ அமிலங்கள் மற்றும் கால்சியம், பொட்டாசியம், இரும்பு உள்ளிட்ட தாது உப்புக்கள் இருப்பதால் வளர் இளம் பருவத்தினருக்குத் தாராளமாகக் கொடுக்கலாம். கற்றாழையைத் தினமும் எடுத்துக்கொண்டால், தேவையற்ற கொழுப்பு கரைந்து, உடல் ஸ்லிம் ஆகும். 


நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய், அல்சர், தைராய்டு, சோரியாசிஸ், சீரற்ற ரத்த ஓட்டம் போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்கள் கற்றாழையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும். மூட்டு வலி, கழுத்து வலியின்போது வலி ஏற்பட்ட இடத்தில் கற்றாழையை நீீளவாக்கில் வெட்டி சூடு செய்து, பற்றுப் போடுவதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். 


கற்றாழையில், 'ஆன்டிமைக்ரொபியல்’ (Antimicrobial) என்ற ரசாயனம் இருப்பதால், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் ஜெல்லை முகத்தில் தொடர்ந்து பூசுவதன் மூலம் இளம் வயதில் உண்டாகும் தோல் சுருக்கம் மறைந்து அழகு கூடும். அதிக நேரம் வெயிலில் அலைபவர்கள், முகத்தில் பூசி வந்தால், கருமை, கரும்புள்ளி ஏற்படாமல் காக்கும். 


கற்றாழைச் சாற்றைத் தலையில் தடவி 10 நிமிடம் ஊறவைத்துக் குளித்தால், பேன், பொடுகு நீங்கும். ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள், தேனுடன் இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால், ஆஸ்துமா விரைவில் குணமாகும். 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் இதைக் கொடுக்கக் கூடாது. காரணம், உடலில் குளிர்ச்சியை அதிகப்படுத்திவிடும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் கற்றாழையை உண்ணாமல், வெளிப்புறம் மட்டும் பயன்படுத்தலாம்.'கற்றாழை, நமக்கு இயற்கை கொடுத்த இனிய அன்பளிப்பு!


களைப்பைப் போக்கும் கற்றாழை! 

சென்னை கே.கே.நகர் சிவன் பார்க் எதிரில், காலை 5 மணி முதல் 9 மணி வரை வாக்கிங் செல்வோர் கற்றாழை ஜூஸ் விரும்பி அருந்துகின்றனர். 'நடந்த களைப்பை போக்கி, மேலும் நடப்பதற்கான தெம்பைத் தருகிறது கற்றாழை’ என்கின்றனர். கற்றாழை ஜூஸ் விற்கும் ராஜ்குமார் மற்றும் விஜய்யிடம் கற்றாழை ஜூஸ் செய்வது பற்றிக் கேட்டோம். 

கிட்டத்தட்ட 300 வகையான கற்றாழைகள் உலக அளவில் இருந்தாலும் பரவலாகப் பயன்படுவது, சோற்றுக் கற்றாழையும், செங்கற்றாழையும்தான். கற்றாழையின் அனைத்துப் பகுதிகளுமே பலன் தரக்கூடியவை. கற்றாழையுடன் சர்க்கரை, ஐஸ் கட்டி, சாதாரண உப்பு போன்றவற்றைக் கலந்து சாப்பிடக் கூடாது. கற்றாழை ஜூஸ் தயாரிப்பது மிக மிக எளிது!

தேவையான பொருட்கள்: கற்றாழை ஒரு கப், கருப்பு உப்பு (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) தேவையான அளவு, மோர் ஒரு செம்பு, தயிர் ஒரு கப்.

செய்யும் முறை: சோற்றுக் கற்றாழையின் மேல் தோலை நீக்கி குறைந்தது ஏழு முறை அதன் வழுவழுப்புத்தன்மை மற்றும் கசப்புத்தன்மை நீங்கும் வரை சாதாரண நீரில் கழுவ வேண்டும். பிறகு, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். இதனுடன் மோர், தயிர், தேவையான அளவு கருப்பு உப்பு சேர்த்து மத்தால் கடைந்தால் கற்றாழை ஜூஸ் ரெடி!

No comments:

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Related Posts Plugin for WordPress, Blogger...